Regional Language (Tamil) – Bhakti to Ambal
5 months ago by SVBF
கல்வி கேள்விகளில் மேன்மை பெற சௌந்தர்யலஹரீ ஶ்லோகங்கள்
பரப்ரம்ம ஸ்வரூபத்தின் ஒரே மாயா ஶக்தி, நான்கு விதமாக வெளிப்படும். ஸ்ருஷ்டி காலத்தில் பவாநி ஆகவும், புருஷ ரூபத்தில் அனைவரையும் காக்கும் ரூபத்தில் விஷ்ணுவாகவும், கோபத்தில் காளியாகவும், அரக்கர்களிடம் போர் புரியும் ஸமயம் துர்கையாகவும் பரிணமிக்கிறாள்.
இதையே,
ஏகைவ ஶக்தி: பரமேஶ்வரஸ்ய பிந்ந: சதுர்தா விநியோக காலே | போகே பவாநீ, ஸமரேஷு துர்கா, கோபேஷு காளீ , புருஷேஷு விஷ்ணு: ||
என்று புராணங்கள் கூறுகின்றன.
அவளே நமக்கு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என நான்கு புருஷார்த்தங்களையும் தருபவள்; ஸம்ஸாரப் பெருங்கடலில் இருந்து கறையேற்றும் படகாக இருப்பவள்; ஞான வடிவினள்; உயர்ந்த பிரம்ம ஞானத்தை போதிப்பவள்.
அம்பிகையின் வழிபாடுகளில் மிக முக்கியமானதும், வேதங்களினால் ஸ்தாபிக்கப்பட்டதும், அதி சங்கரர் முதலிய பல மஹான்களினால் கையாளப்பெற்றதும் ஆக இருப்பது ஸ்ரீ வித்யா எனும் தந்திர முறையாகும். ஸ்ரீ வித்யா தந்திரத்தில் மிக முக்கியமான நூலாக போற்றப்படுவது சௌந்தர்யலஹரீ என்னும் நூலாகும். இது ஆதி சங்கரரால் இயற்றப்பட்டதாகும். இதில் முதல் 41 ஶ்லோகங்களில் அம்பிகையின் வழிபாட்டு முறைகளைச் சொல்லும் தந்த்ரீக விஷயங்களும், பின்வரும் ஶ்லோகங்களில் அம்பிகையின் வடிவழகை தலை முதல் பாதம் வரை விளக்குவதாக அமைந்துள்ளது. முதல் 41 ஶ்லோகங்கள் பரமேஶ்வரனாலும் இயற்றப்பட்டது என்றும் கூறுவர். நாம் அதில் 15, 16 மற்றும் 17 ஶ்லோகங்களில் கூறப்படும் அம்பிகையை ஞான காரணியாய் வழிபடும் ஸாரஸ்வத பிரயோகம் என்னும் பகுதியைப் பற்றிசிறிது சிந்திப்போம்.
இது அம்பிகையை வித்யா ஸ்வரூபிணியாக வழிபடுவதாக அமைந்துள்ளது. இந்த மூன்று ஶ்லோகங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக வருவதோடு மட்டும் அல்லாமல், சத்வ குணம் நிறைந்தவர்களாய், வித்யா விநய சம்பன்னா என்று விநயதோடும் இருப்பார்கள்.
ஶரஜ்ஜ்யோத்ஸ்நாஶுத்³தா⁴ம் ஶஶியுதஜடாஜூடமகுடாம்
வரத்ராஸத்ராணஸ்ப²டிகக⁴டிகாபுஸ்தககராம் ।
ஸக்ருந்ந த்வா நத்வா கத²மிவ ஸதாம் ஸந்நித³த⁴தே
மது⁴க்ஷீரத்³ராக்ஷாமது⁴ரிமது⁴ரீணா: ப²ணிதய: ॥ 15॥
இந்த ஶ்லோகத்தின் பொருள்:
சரத் காலத்தில் உள்ள நிலவைப்போல மிகுந்த வெண்மையானவளாய், நன்கு நவரத்னத்தால் இழைக்கப்பெற்ற கிரீடத்தில் சந்திர கலையுடனும், தனது நான்கு கரங்களில் பக்தர்களுக்கு வேண்டியதை தரும் வரத முத்திரையும் (கீழ் நோக்கிய கை), யம பயத்தை அழித்து மோக்ஷத்தை அளிக்கும் அபய முத்திரையும் (மேல் நோக்கிய கை), ஸ்படிக மாலையும், புஸ்தகத்தையும் வைத்துக்கொண்டு இருப்பவளான உன்னை ஒரு முறை மட்டும் நமஸ்காரம் பண்ணினால், சிறந்த தேன், திராக்ஷை பழம், நல்ல பால் முதலியவைகளை விட இனிய வாக்விலாசம் தானாகவே வந்து சேரும்.
கல்வி கேள்விகளில் மேன்மையை அடையவும், அபாரமான கவனிக்கும் சக்தி (grasping power) மற்றும் கற்றதை மனதில் நிலை நிறுத்தும் சக்தி (memory power) ஆகியவை இந்த ஶ்லோகத்தில் கூறியவாறு அம்பிகையை தியானம் செய்வதால் கிடைக்கும் என்பது பெரியோர்களது வாக்கு.
கவீந்த்³ராணாம் சேத: கமலவந பா³லாதபருசிம்
ப⁴ஜந்தே யே ஸந்த: கதிசித³ருணாமேவ ப⁴வதீம் ।
விரிஞ்சிப்ரேயஸ்யாஸ்தருணதரஶ்ருʼங்கா³ரலஹரீ-
க³பீ⁴ராபி⁴ர்வாக்³பி⁴ர்வித³த⁴தி ஸதாம் ரஞ்ஜநமமீ ॥ 16॥
இந்த ஶ்லோகத்தின் பொருள்:
சிறந்த அறிஞர்களின் மனதாகிய தாமரை மலர்களை மலரச்செய்யும் இளம்சூரியனைப்போல் செம்மை நிறம் கொண்ட “அருணா” என்ற உன் வடிவத்தை யார் வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு அந்த ஸரஸ்வதி தேவியின் கம்பிரமான வாக் விலாசம் (eloquency) போல் கைவரப்பெற்று அனைவரையும் மகிழச்செய்யவார்கள்.
இந்த “அருணா” தேவியின் ஸ்வரூபம் வாமகேஸ்வர தந்திரம் என்னும் நூலில் சிறப்பித்து கூறப்பட்டு இருக்கின்றது. இந்த தேவியானவள், நன்கு சிவந்த நிறத்தவளாய், எட்டு கைகளூடே பாசக்கயிறு, அங்குசம் (யானைப்பாகன் கையில் வைத்திருக்கும் ஒருவித குச்சி), கரும்பூ வில், புஷ்ப பாணம், அபய முத்திரை, வரத முத்திரை, ஸ்படிக மாலை மற்றும் புஸ்தகத்தோடே மூன்று கண்களுடன், அம்ருதக்கடலில் விளையாடிக்கொண்டு இருப்பவளாய் தியானிக்க வேண்டும்.
இந்த ஶ்லோகத்தை தியானம் மற்றும் பாராயணம் செய்பவர்களுக்கு நல்ல வாக்விலாசம் ஏற்படும் என்பது பெரியோர்களது முடிவாகும்.
ஸவித்ரீபி⁴ர்வாசாம் ஶஶிமணிஶிலாப⁴ங்க³ருசிபி:⁴
வஶிந்யாத்³யாபி⁴ஸ்த்வாம் ஸஹ ஜநநி ஸஞ்சிந்தயதி ய: ।
ஸ கர்தா காவ்யாநாம் ப⁴வதி மஹதாம் ப⁴ங்கி³ருசிபி:⁴
வசோபி⁴ர்வாக்³தே³வீ வத³நகமலாமோத³மது⁴ரை: ॥ 17॥
இந்த ஶ்லோகத்தின் பொருள்:
பரமேஶ்வரியை வசினி முதலிய வாக்தேவிகளுடன், சந்திரனைப்போன்ற மிகுந்த வெண்மை நிறம் உடையவளாய், எவன் உபாசிக்கின்றானோ, அவன் மஹா கவிகளைப்போல பல காவியங்களைப் படைப்பான்.
இந்த ஶ்லோகத்தை தியானம் மற்றும் பாராயணம் செய்பவர்களுக்கு நல்ல கற்பனைத்திறன் (imaginative power) வளரும் என்பது பெரியோர்களது முடிபாகும்.
இவ்வாறு இந்த மூன்று ஶ்லோகங்களால் கல்வியில் ஆர்வம், கவனிக்கும் சக்தி, கவனித்ததை நிலை நிறுத்தும் சக்தி, நிலை நிறுத்தியதை மற்றவர்களுக்கு புரியும்படி வெளிப்படுத்தும் தன்மை மற்றும் மிகுந்த கற்பனைத்திறன் ஆகியவைகளைப் பெற்று அவளின் கருணைக்கு பாத்திரம் அவோமாக.
– Shyam Panchapakeshan